Thursday, April 28, 2016

குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும்...?



ன்று வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன். மரங்கள் சூழ, லாரி பேக்கர் ( உலகம் கொண்டாடும் கட்டட கலைஞர் ) கட்டட அமைப்பில் கட்டப்பட்டிருந்த, குழந்தைகள் முகத்தில் எந்த வெறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக பட்டாம்பூச்சியை துரத்தி சென்று கொண்டிருந்த அந்த பள்ளிக்கு நான் அன்று வேண்டா வெறுப்பாகத்தான் சென்றேன்.

 
தருமபுரி மாவட்டத்தின் முன்னாள் தொடக்க கல்வி அலுவலர், அலுவல் நிமித்தமாக தருமபுரி மாவட்டத்தில் காடுகள் சூழ இருக்கும் நாகர்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த பள்ளி பயிற்றுவிக்கும் முறை, கட்டட அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகவும், முக்கியமான அந்த பள்ளியின் தாளாளர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், நான் அந்த பள்ளியை ஒரு முறையேனும் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் சொல்லிய போது, எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த பள்ளிக்கு சென்றேன்.

அரசின் பங்களிப்பில்லாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும், பெரும்பாலும் பணத்தை நோக்கமாக கொண்டது என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால்தான் அந்த பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக சென்றேன். மாணவர்கள் மற்றும் தாளாளருடான அந்த நெடிய  உரையாடல் அந்த எண்ணத்தை மாற்றியது. நாம் பார்க்காவிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை புரிய வைத்தது.

இவ்வளவு தீமைகளுக்கு பின்பும் இவ்வுலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று என்னுள் அவ்வப்போது எழும் கேள்விக்கு... ‘இன்னும் இவர்களால்தான் இவ்வுலகம் சிறிதேனும் அறத்துடன் இயங்கி கொண்டிருக்கிறது' என்று புரிய வைத்தது...’

பீடிகை போதும், வாருங்கள் பள்ளிக்கு போவோம்...
அந்த பள்ளியில் நான் இருந்த சில மணி நேரங்களில் பெற்ற அனுபவத்தை, அடைந்த பரவசத்தை, உங்களுக்கு அப்படியே கடத்தும் சொல் ஆளுமை எனக்கில்லை. இருந்தாலும் முயல்கிறேன்...
புவிதம் - காட்டுப் பள்ளி:

புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்...? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்...? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.

நான் அந்த பள்ளிக்கு சென்றது ஒரு வெண்மேகம், தன் ஒளிக்கீற்றை பரப்பிய ஒரு காலை வேளையில். குழந்தைகள், கைகளில் குடம், களை கொத்தியுடன் பரபரப்பாக அங்கு இங்கும் சென்று கொண்டிருந்தார்கள். “பசங்களா... எங்கடா போறீங்க... ?” என்று ஒரு மாணவனை இடைமறித்து கேட்டபோது, “அண்ணா.... நாங்க பள்ளி தோட்டத்தில காய்கறிகள் விதைத்து இருக்கோம்னா... அதுக்கு தண்ணி ஊத்தப் போறோம்...?” என்று சொல்லிவிட்டு குடுகுடுவென ஓடினான்.

அவனை பின் தொடர்ந்து சென்றபோது, மாணவர்கள் பள்ளியின் பின் புறம் உண்டாக்கி உள்ள காய்கறி வனத்தை அடைந்தேன். முதிர்ந்த விவசாயிகள் போல், ஒரு ஒருங்கிணைந்த பண்ணையையே அந்த மாணவர்கள் உண்டாக்கி இருந்தார்கள்.

அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
“அண்ணா... நாங்க கீரை, உருளைக் கிழங்கு, சுரைக்காய், பீர்க்கை எல்லாம் போட்டு இருக்கோம்னா.... எட்டாவது படிக்கிற அண்ணன் எல்லாம் சேர்ந்து, சோளம் போட்டு இருக்காங்க...” என்றாள் நான்காம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வி.
பள்ளி மணி ஒலிக்கிறது. மாணவர்கள் உற்சாகமாக கை கால்களை கழுவிவிட்டு வகுப்பிற்கு செல்கிறார்கள்.

“மிஸ்... கிளாசுக்குள் வேண்டாம்... இன்னைக்கு மரத்தடியில் வகுப்பெடுங்க...” என்கிறான் ஐந்தாம் வகுப்பு மாணவன். மற்ற மாணவர்கள் எல்லாம் அவனை வழிமொழிகிறார்கள். அன்றைய வகுப்பு மர நிழலில் நடக்கிறது. அதே வகுப்பை சேர்ந்த இன்னொரு மாணவன், “மிஸ் எனக்கு இன்னைக்கு ரொம்ப சலிப்பா இருக்கு... நான் ஓவியம் வரையட்டுமா..” என்கிறான். அவனை அந்த ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். இப்படியாகதான் இருக்கிறது புவிதம் பள்ளி.

அமைதிக்கான ஒரு தேடல்...

உங்களுக்கு அந்த பள்ளியின் தாளாளர் மீனாட்சியை பற்றி கூறிவிடுகிறேன். அப்போதுதான், அந்த பள்ளியை பற்றி புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.

மீனாட்சி,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.
'நாம் பள்ளிகளில் வன்முறையை பயிற்றுவிக்கிறோம்...'

இனி, மீனாட்சியுடனான உரையாடல்...

உங்களுடன் பேச நிறைய இருக்கிறது. முதலில், உங்கள் பள்ளியின் பெயரில் இருந்தே தொடங்குகிறேன். ஏன் பள்ளிக்கு புவிதம் என்று பெயர்...?

"நாங்கள் நேரத்திற்கு பின்னால் ஓடுவதில்லை. நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்" என்று சோளக்கூழைத் தந்துவிட்டு பேச துவங்குகிறார். "நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு அப்படியொரு பெயர் வைத்தேன்."

புரியவில்லையே...?

"புவிதம் = புவி + இதம். அதாவது புவிக்கு இதமாக இருப்பது. எங்கள் பள்ளி அப்படிதான் இயங்குகிறது."

தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் எங்களுக்கே, தமிழ் தகராறாக இருக்கிறது. ஆனால், ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட உங்கள் மொழி அறிவு வியக்க வைக்கிறதே...?

"அப்படியெல்லாம் இல்லை. நான் தமிழகம் வந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், நான் இன்னும் தமிழ் மாணவிதான். இன்னும் தமிழ் பயின்று கொண்டுதான் இருக்கிறேன்."

சரி. மீண்டும் விஷயத்திற்கு வருவோம். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பள்ளி துவங்கியதற்கான நோக்கம் என்ன...? நீங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமும் வாங்குவது இல்லை என்று அறிகிறேன்... கல்வி பணம் ஆகிவிட்ட சூழலில், உங்கள் நோக்கம்தான் என்ன...? 
"இந்த பள்ளி என் சுயநலத்தின் நீட்சி. இங்கு குடிபெயர்ந்தவுடன், என் வீட்டில் இந்த கிராம குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டியூசன் எடுக்க துவங்கினேன். எங்கள் மகள் கயாவும் வளரத் தொடங்கினாள். குழந்தைகள் மீது வன்முறையை திணிக்கும் பள்ளிகளில் என் மகளை சேர்க்க விருப்பமில்லை. அதே நேரம் மாலை நேரத்தில் என்னிடம் பயிலும் மாணவர்களும், முழு நேரமாக இங்கு படிக்க விரும்பினார்கள். என் மகளுக்காகவும், அந்த குழந்தைகளுக்காகவும்தான் இந்த பள்ளியை துவங்கினேன்."

'வன்முறையை திணிக்கும் பள்ளிகள்’. நீங்கள் வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்...?


"ஆம். வன்முறைதான். குழந்தைகள் அனைவரும் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களை அமர்ந்திருக்க வைப்பது வன்முறை இல்லையா...?. அவர்கள் எவ்வளவு இறுக்கமாக இருப்பார்கள், அதை நீங்கள் உணரவில்லையா... சரி.. மற்றவர்களை விடுங்கள்... நீங்கள் எவ்வளவு இறுக்கமாக இருந்திருப்பீர்கள்...? இந்த இறுக்கம் அவர்கள் சுயமாக சிந்திப்பதை தடுக்கிறது. அவர்கள் சுயத்தை அழிக்கிறது. அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறது. அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். ஒப்பீட்டளவில், அரசாங்க பள்ளிகள் மிகவும் சுதந்திரமானது. அங்கு பயிலும் மாணவர்கள்தான் அதிக தன்னம்பிக்கை உடையவராக காணப்படுகிறார்கள்."

பள்ளிகள் மாறவேண்டும் என்கிறீர்கள். ஆனால், பாடத்திட்டமே மோசமாகதானே இருக்கிறது...? 

"சமச்சீர் கல்வி எவ்வளவோ பரவாயில்லை. அது மாணவர்களை சிந்திக்க தூண்டுகிறது. அதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், நாங்கள் பயிற்றுவிக்கும் முறை மூலம் அதை இலகுவாக்குகிறோம். அதாவது சிறு கதைகள், பாடல்களை நாங்களே உண்டாக்குகிறோம். அதில் பாடத்திட்டத்தில் உள்ள விஷயங்களை கொண்டு வருகிறோம். அது கற்றலை சுலபமாக்குகிறது.

மேலும், இங்கு Ranking முறை இல்லை... இங்கு நடக்கும் தேர்வானது, மாணவர்களின் அறியாமையை அளக்கும் அளவுகோலாக இருப்பதில்லை; மாணவர்களை சிந்திக்க தூண்டுவதாக இருக்கிறது. இங்கு bilingual ஆக தமிழிலும், ஆங்கிலத்திலும் பாடம் நடத்துகிறோம். அதனால் அவர்கள் மொழி அறிவும் சிறப்பாக இருக்கிறது.

அதே நேரம், உங்களுக்கு இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். மாற்றத்தை விரும்பும் நாங்கள் சிறு குழு. எங்களுக்கென்று சில வரம்புகள் உண்டு. அதில்தான் நாங்கள் வேலை செய்ய முடியும்."
எனக்கு நன்றாக புரிகிறது. சரி, பெற்றோர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது. அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் தோட்ட வேலை செய்ய எப்படி அனுமதிக்கிறார்கள்...?

"பெற்றோர்களின் மனநிலையும் நிச்சயம் மாற வேண்டும். சிலர், பள்ளி என்பதை பாடத்திட்டத்தை கற்பிக்கும் இடமாக மட்டும்தான் பார்க்கிறார்கள். எங்களை பொறுத்தவரை பள்ளி என்பது வாழ்வியலை பயிற்றுவிக்கும் இடம். மாணவர்கள் விவசாயத்தையும் கற்க வேண்டும். அப்போதுதான் நாளை அவர்கள் அரசு அதிகாரிகளாக அல்லது அரசு கொள்கைகளை வடிவமைக்கும் இடத்திற்கு செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு கொள்கைகளை வடிவமைப்பார்கள். நாங்கள் விவசாயம் மட்டும் சொல்லித் தரவில்லை, நெசவு தொழில், கட்டடக் கலையையும் சொல்லிக் கொடுக்கிறோம்.அதாவது மாணவர்கள் சுயச்சார்புடன் இருக்க பயிற்றுவிக்கிறோம்.

மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை அவர்களுக்கு மதிய நேரத்தில் வேக வைத்து தருகிறோம். ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் அவர்களே வளர்த்த காய்கறிகளை அவர்கள் உண்ணுகிறார்கள்."

ஹூம். கட்டட கலை என்றவுடன்தான் நினைவிற்கு வருகிறது, பள்ளிகளின் கட்டடம் வித்தியாசமாக உள்ளதே...?

"லாரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இவை. அதாவது, மாணவர்களுக்கு இயற்கையை சுரண்டக் கூடாது என்று நாம் கற்று தரும்போது, அவர்களின் சூழலும் அது மாதிரிதானே இருக்க வேண்டும். இந்த கட்டடங்களில் அதிக அளவில் சிமெண்ட் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையை சுரண்டி கட்டவில்லை. இந்த இடத்தில் என்ன பொருள் கிடைக்கிறதோ, அதை கொண்டு கட்டி உள்ளோம். மேலும், பகலில் இந்த கட்டடங்களில் தேவையான அளவிற்கு வெளிச்சமும், காற்றும் இருக்கும். அதனால், மின்விசிறியும், விளக்கும் தேவையில்லை. குழந்தைகளிடம், அணு உலையால், அனல் மின் நிலையத்தால் சூழல் கேடு என்று பயிற்றுவிக்கும் முன், மின்சாரத்தை விரயமாக்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்."

நீங்கள் புனேவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொறுக்காமல் தமிழகம் வந்தீர்கள். உங்கள் மாணவர்களிடம் அந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசி உள்ளீர்களா...?

"நிச்சயமாக. அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருகிறோம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை என்கிறோம். இந்த புவி நமக்கு மட்டுமானது இல்லை, அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று சொல்லி தருகிறோம். இதையெல்லாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்லி தராமல், அது போல் வாழவும் பயிற்றுவிக்கிறோம்."

எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், உங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. மேல் படிப்பிற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகளுக்குதான் செல்ல வேண்டும். அதை எப்படி உங்கள் மாணவர்கள் எதிர் கொள்கிறார்கள்...? 

"ஆம். ஆனால் நான் முன்பே கூறியது போல், எங்களால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. வழக்கமான பள்ளிகளுக்கு இங்கிருந்து செல்லும் மாணவர்கள், அதில் தங்களை பொறுத்திக் கொள்ள சில காலம் எடுக்கிறது. ஆனால், அடித்தளம் சிறப்பாக உள்ளதால் அதிலும் நல்ல மதிப்பெண்களையே எடுக்கிறார்கள். புரிந்து கொண்டு பயில்கிறார்கள்." என்று சொன்ன மீனாட்சி,  பேட்டியின் முடிவில் ஒரு விஷயத்தை சொன்னார். அதுவே இந்த கட்டுரைக்கும் சிறந்த முடிவுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

“மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பெரும் பகுதியை பள்ளிகளில் கழிக்கிறார்கள். அதனால், அந்த இடம் அவர்களுக்கு பிடித்தமான இடமாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்பி கற்க வேண்டும். இறுக்கமான சூழல் இருக்க கூடாது. நாம் மோசமான முறையில் அவர்கள் மீது ஒன்றை திணிக்கும் போது, மோசமான ஒன்றைதான் அறுவடை செய்ய முடியும். நாம் அன்பையும், அறத்தையும் நல்ல சூழலில் விதைத்தால், இந்த பிரபஞ்சம் பூக்களால் நிறையும்.”

ஆம். புவிதம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது.

- மு.நியாஸ் அகமது

Saturday, April 23, 2016

அமிர்த கரைசல், ஜீவாமிர்தம்......

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம்.



இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!
தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.
பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!
இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''
''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''
''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

நாம் ஏன் மரம் வளர்க்க வேண்டும் ?




நாம் தினசரி வாகனங்களுக்கு உபயோகப்படுத்தும் ஒரு லிட்டர் டீசல் மட்டும் 2.7 கிலோ கார்பன்டை ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது ! ஒவ்வொரு வினாடிக்கும் எவ்வளவு டீசல் உலகில் விற்பனையாகும் ?
அதனை பயன்படுத்துவதன் மூலம் எவ்வளவு கார்பன்டை ஆக்ஸைடு உலகில் உற்பத்தியாகும் கொஞ்சம் யோசித்தோமா ?
ஆண்டு தோறும் அண்டைவெளியில் 36 பில்லியன் கார்பன் உருவாகி உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது !!
காற்றில் உள்ள கார்பனின் அளவை சம அளவில் வைக்க வேண்டுமென்றால் அவை மரங்களால் மட்டுமே முடியும் !
இதை அறியாமல் நாம் மரம் வளர்ப்பில் கவனமின்றி உள்ளோம்.
மரம் வளர்ப்போம்.....!
மனித நலம் காப்போம்....!!

"மரு" (Skin Tag) உதிர...

     இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்
அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.இத்தாவரத்தின் முழுப்பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகிறது. துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும்,மலமிளக்கும், சுவாசத்தைச் சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும், விந்து ஒழுக்கை குணமாக்கும். அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர கால் ஆணி,பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும் மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்

Friday, April 22, 2016

ஏற்றம் கொடுக்கும் எருமைகள்...

ஊருக்குள் நுழைந்து, ''எருமை மாடு வளக்கறார்ல' என்று ஆரம்பித்தாலே போதும். சின்னக் குழந்தைகள்கூட அடையாளம் காட்டி விடுகின்றன, ஸ்டீபனின் எருமைப் பண்ணையை! அந்தளவுக்கு

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்டீபனின் பால் பண்ணை ஏக பிரபலம்.

பண்ணையை நெருங்கும்போதே, ''ஏ மேனகா... இந்தப் பக்கம் வந்து நில்லு. ராஜகுமாரி... நீ தண்ணி குடிக்க மாட்டியா?'' என்று பாலர் பள்ளிக்கூடத்தில் கேட்பது போன்ற செல்ல அதட்டல்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர், ஸ்டீபனேதான்!

''எருமைங்க நம்ம சொல்லுக்குக் கட்டுப்படாது. வளக்கறது சிரமம்னு சொல்வாங்க. ஆனா, அதெல்லாம் தப்பான கருத்து. நாம நல்லா பழகினா எல்லா பிராணிகளுமே நல்லாத்தான் பழகும். அதுக்கு எருமையும் விதிவிலக்கு கிடையாது. ஒவ்வொண்ணையும் தனித்தனியா பேர் வெச்சு அழைச்சு, தடவிக் கொடுக்கிறப்போ, நமக்கும் அதுகளுக்கும் ஒரு ஆத்மார்த்தமான உறவு ஏற்பட்டு, எருமைகள் நல்ல ஆரோக்கியத்தோட இருந்து, நமக்கு வருமானத்தைக் கொடுக்கும்'' என்று முன்னுரை கொடுத்த ஸ்டீபன், தொடர்ந்தார்.

அன்று மூன்று மாடுகள்... இன்று 31 மாடுகள் !

''நான் எம்.ஏ. எகனாமிக்ஸ் படிச்சுட்டு, வேலை தேடிக்கிட்டிருந்தப்போ... 1973-ம் வருஷம் அப்பாவுக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்துடுச்சு. உடனே வீட்டை விட்டு வெளியேறி, பால் வியாபாரத்தை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல லஷ்மி விலாஸ் பேங்க் மேனேஜர் வீட்டுக்கும் நான் பால் கொடுத்துட்டிருந்தேன். என்னோட படிப்பையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அவராவே எனக்கு மாடு வாங்க 6 ஆயிரம் ரூபாய் லோன் போட்டுக் கொடுத்தார்.

மாடு வளர்க்க இட வசதி இல்லாததால, அந்தப் பணத்துல வாங்கின நாலு மாடுகளையும் தெரிஞ்ச விவசாயிகள்கிட்ட கொடுத்து வளர்க்கச் சொன்னேன். அதன் மூலமா கிடைச்ச பாலை வித்து கடனை அடைச்சேன். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து, 1998-ம் வருஷம், கறவையில இருக்கிற நாட்டு எருமைகள கன்னுக்குட்டிகளோட வாங்கினேன். நான் வாங்கினது மூணு மாடு. அதுல இருந்து பெருக்கி, இப்போ... 17 கிடேரி எருமை, 8 கிடேரி கன்னுக்குட்டி, 6 கிடா கன்னுகுட்டிகள்னு மொத்தம் 31 உருப்படி இருக்கு.

சுத்தம் அவசியம் !

என்னோட மனைவி திலகராணியும், நானும்தான் மாடுகள பராமரிக்கிறோம். இதுல கிடைச்ச வருமானத்துல என் பொண்ணு கிரேசி ராணியை எம்.ஃபில் வரை படிக்க வெச்சுருக்கேன். மகன் விஜய் அமலோர்ப்பவராஜ் பி.பி.ஏ. படிச்சுட்டுருக்கான். இவங்க ரெண்டு பேரும்கூட ஓய்வு நேரத்துல மாடுகளைப் பராமரிக்கிற வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.  

எங்கப் பண்ணைய எப்பவும் சுத்தமா இருக்கற மாதிரி பாத்துக்குவோம். முழுமையா மேய்ச்சல் மூலமாத்தான் மாடுகளை வளக்குறோம். அதனால, எல்லா மாடுகளுமே நோய் நொடி இல்லாம நல்ல திடகாத்திரமா இருக்கறதோட, பராமரிப்புச் செலவும் குறைஞ்சுடுது'' என்ற ஸ்டீபன், பராமரிப்பு பற்றிய தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.  

கொட்டகை இருந்தால் ஆரோக்கியம் !

''பொதுவா எருமை மாடுகள திறந்த வெளியில்தான் கட்டி வைப்பாங்க. நாங்க கொட்டகை போட்டுதான் வளக்கறோம். அப்பதான் மாடுக ஆரோக்கியமா இருக்கும். 40 அடி நீளம்,

30 அடி அகலம், 14 அடி உயரத்துல கொட்டகை போட்டிருக்கோம். கொசு, ஈ மாதிரியான பூச்சிகள்ட்ட இருந்து காப்பாத்துறதுக்காக தினமும் ராத்திரியில கரன்ட்ல இயங்குற கொசு விரட்டிகளை போட்டு வெப்போம்.

மேய்ச்சல் முறையில் செலவு குறைவு !

தினமும் காலையில ஆறு மணிக்குள்ள பாலைக் கறந்துடுவோம். ஏழு மணியிலிருந்து மதியம் பன்னெண்டு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். வெயில் ஏறிடுச்சுனா... பக்கத்துல இருக்குற குளத்துக்குள்ள இறக்கி விட்டுடுவோம். திரும்ப மூணு மணிக்கு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து பால் கறந்துட்டு திரும்பவும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம்.

பொழுது சாய்ஞ்சதுக்கப்பறம் பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து, குழாய்ல தண்ணியைப் பீய்ச்சி அடிச்சு மாடுகளைச் சுத்தப்படுத்தி கொட்டகையில கட்டிடுவோம். கோதுமைத் தவிடை ஊற வெச்சு பருத்திக் கொட்டையைக் கலந்து வெச்சுடுவோம். முழு மேய்ச்சல்ங்கறதால தீவனச் செலவும் ரொம்பக் குறைவுதான்.

ஆரம்பத்துல நான் வாங்கின மாடுகள்ல ரெண்டு மாடுகளுக்கு கிட்டத்தட்ட 20 வயசு நெருங்கிடுச்சு. ரெண்டுமே பதிமூணு முறை கன்னு போட்டிருக்கு, ஆனாலும், அந்த மாடுகள் இன்னமும் நல்ல ஆரோக்கியமா இருக்குது. முறையா பராமரிக்கிறதுதான் இதுக்குக் காரணம்'' என்று பெருமையோடு சொன்ன ஸ்டீபன், வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.  

ஆண்டுக்கு 15,000 லிட்டர் பால் !

''காலையில... சாயங்காலம்னு ரெண்டு வேளையும் ஒவ்வொரு லிட்டர் பாலை கன்னுக்குட்டிக்காக விட்டுட்டுத்தான் கறப்போம். ஒரு எருமையில இருந்து எட்டு மாசம் வரை பால் கிடைக்கும். எட்டு மாசத்துல ஒரு மாடு மூலமா 1,000 லிட்டர் வரை கிடைக்குது. போன வருஷம் என்கிட்ட இருந்த மாடுகள் மூலமா மொத்தம் 14 ஆயிரம் லிட்டர் கிடைச்சுது. இந்த வருஷம் இன்னமும் அதிகமா கிடைக்கும்.

கறவை குறையறது, முத ஈத்துனு கணக்குப் பாத்தா, வருஷத்துக்கு சராசரியா எப்படியும் 15 ஆயிரம் லிட்டர் பால் கிடைச்சுடும். ஒரு லிட்டர் பால் 25 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், பராமரிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் போக, 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதில்லாம கிடைக்கிற கிடா கன்னுக்குட்டிகளை ரெண்டு வயசு வரைக்கும் வளர்த்து வித்துடுவோம். ஒரு கிடாவுக்கு, 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். கிடேரிக் கன்னுகளை நாங்களே வெச்சுக்குவோம்.

மாடுகள் மூலமா சம்பாதிச்ச பணத்துல... இப்போ மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கி இருக்கோம். அதுல பசுந்தீவனங்களை சாகுபடி செய்யலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள பண்ணையில 100 எருமைகளை நிப்பாட்டணுங்கிறதுதான் என்னோட இப்போதைய கனவு'' என்று உறுதியோடு சொன்ன ஸ்டீபனுக்கு, வாழ்த்துக்கள் சொல்லி விடை பெற்றோம்.

 தொடர்புக்கு,
ஸ்டீபன்,
செல்போன்: 99657-42383 .

எருமை மாடுகளை வளர்ப்பதற்கு ஸ்டீபன் தரும் ஆலோசனைகள்...

காற்றோட்டம் முக்கியம்: வளர்க்கப்போகும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ற அளவுக்குக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூரை உயரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் காற்றோட்டம் இருக்கும். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு கொட்டகைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். காலை சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மாலை மூன்று மணியளவிலும் பாலைக் கறந்துவிட வேண்டும். கன்றுகளுக்கு போதுமான அளவு பால் விட வேண்டியது அவசியம். நீர்நிலைகள் இருக்கும் பகுதியில்தான் மாடுகளை மேய்க்க அனுப்ப வேண்டும். நன்பகல் நேரத்தில் மாடுகளை நீர்நிலைகளில் இறக்கிக் குளிப்பாட்ட வேண்டும்.

வைக்கோல்... கவனம்: 2 கிலோ பருத்திக்கொட்டையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, அதனுடன் 10 கிலோ கோதுமைத் தவிடைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் கொட்டகையில் அடைப்பதற்கு முன், பெரிய மாடுகளுக்கு இந்தக் கலவையில் தினமும் கால் கிலோ அளவுக்குத் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். வளரும் கன்றுகளுக்கு 100 கிராம் அளவுக்கு கொடுக்க வேண்டும்.

என்னுடைய அனுபவத்தில் எருமைகளுக்கு வைக்கோல் கொடுப்பதைக் காட்டிலும் பசுந்தீவனம் கொடுப்பதுதான் லாபகரமாக இருக்கிறது. நமது வயலில் கிடைக்கும்பட்சத்தில் வேண்டுமானால், வைக்கோல் கொடுப்பதில் தவறில்லை. அப்படிக் கொடுக்கும்போது, கண்டிப்பாக ஈரமான வைக்கோலைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் பூஞ்சணத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.    

குறைந்த இடைவெளியில் சினை ஊசி: கிடேரி கன்று இரண்டு வயதில் பருவத்துக்கு வந்துவிடும். அந்த நேரத்தில் சினை ஊசி போட்டால், பத்து மாதங்களில் கன்று ஈன்று விடும். கன்று போட்டதில் இருந்து இருபதாம் நாள் மீண்டும் பருவத்துக்கு வந்து விடும். அதிலிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளிலும் பருவத்துக்கு வரும். கன்று போட்டதில் இருந்து ஆறு மாதங்கள் வரை காத்திருக்காமல் 2 மாதங்களிலேயே மீண்டும் சினை ஊசி போட்டு விட வேண்டும். அதனால், அடுத்த ஈற்றுக்கான இடைவெளியைக் குறைத்து கூடுதல் லாபம் பார்க்க முடியும். இப்படிச் செய்தால் வருடத்துக்கு ஒரு கன்று கிடைத்து விடும்.

ஒவ்வொரு முறையும் கன்று ஈன்ற எட்டு மாதங்கள் வரை பால் கறக்கலாம். கன்று ஈன்ற மூன்று மாதங்கள் வரை ஒரு மாடு எட்டு லிட்டர் வரை பால் கறக்கும். அதன் பிறகு 5 லிட்டர் வரைதான் பால் கறக்கும்.

கன்றுக்கு, பிறந்த 8, 38, 68, 98-ம் நாட்களில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். முறையாகப் பராமரித்தால் வேறு நோய்கள் தாக்குவதில்லை. அதனால் மருத்துவச்செலவும் குறைவாகத்தான் இருக்கும்.

Wednesday, April 20, 2016

குளிர்ச்சிதரும் பிரமிடு குடில் வீடுகளுக்கு மாறும் தமிழக விவசாயிகள்!


தமிழகத்தில் சமீப காலமாக விவசாயத் தோட்டங்களில் சிமென்ட், கம்பி, ஆணியை பயன்படுத்தாமல் நாட்டு செங்கல், செம்மண், புற்று மண்ணில் கடுக்கா, கருப்பட்டி பாகு கலந்து எகிப்திய கட்டிட முறையில் பிரமிடு குடில் வீடுகள் கட்டுவது அதிகரித்துள்ளது.
பிரமிடு வடிவம், பிரபஞ்ச சக்தியை திரட்டி சேமிக்கும் தன்மை உடையது என்ற உண்மையை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தனர். அதனால், அவர்கள் பிரமிடு வடிவத்தில் வீடு, குடில், கல்லறைகளை கட்டினர்.
பழங்கள், பால் உள்ளிட்ட பொருட்களை பிரமிடு அறைக்குள் வைத்தால் சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. அரிவாள், கத்தி, பிளேடு, கடப்பாறை கம்பி உள்ளிட்டவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கிறது. பிரமிடு குடில்களில் அமர்ந்து தியானம் செய்தாலோ அல்லது சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தாலோ உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு புத்துணர்வும் ஏற்படுகிறது.
அதனால், தமிழகத்தில் சமீபகாலமாக விவசாயிகள், பண்ணைத்தோட்டங்களில் மதிய உணவு இடைவேளை ஓய்வுக்காகவும், விவசாயக் கருவிகள், பழங்கள், காய்களை வைக்கவும், பிரமிடு வடிவத்தில் குடில் கட்டுவது அதிகரித்துள்ளது.
இந்த பிரமிடு குடில் வீட்டில் வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமான சீதோஷ்ண நிலையும் இருக்கிறது. திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் பிரமிட் வடிவ குடில் அமைத்துள்ள விவசாயி ஏ.ஜானகிராமன் கூறியதாவது;
சிமென்ட், கம்பி மட்டுமில்லாது ஒரு ஆணி கூட இந்த குடில் வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தவில்லை. தோட்டத்தில் கிடைத்த கம்புகளை கொண்டுதான் கட்டினோம். கம்புகளை, மேற்கூரையில் தென்னங்கீற்றுகளை கட்டுதற்கு இரும்பு ஆணி, கம்பிகளுக்கு பதிலாக செப்பு ஆணி, கம்பிகளை பயன்படுத்தினோம். செங்கல்லிலும், சேம்பர் செங்கலை பயன்படுத்தவில்லை. காளவாசல் நாட்டு செங்கல்லை கொண்டுதான் கட்டினோம்.

திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் விவசாயி ஏ.ஜானகிராமன் தனது தோட்டத்தில் அமைத்துள்ள பிரமிடு குடில் வீடு. Courtesy: Hindu
திண்டுக்கல் அருகே செட்டியப்பட்டியில் விவசாயி ஏ.ஜானகிராமன் தனது தோட்டத்தில் அமைத்துள்ள பிரமிடு குடில் வீடு. Courtesy: Hindu
இந்தக் குடில், முழுக்க முழுக்க ஓடை மண்ணில் கடுக்கா தூள், கருப்பட்டி பாகு, கலந்து பூசினோம். பூசி முடித்தபின், அதன் மேலே புற்று மண், கரையான் மண் பூசி அதன்மேலே சாணி போட்டு மெழுகினோம். வெளியில் குளிர் அடித்தால், குடிலின் உள்ளே வெப்பமாக இருக்கும். வெளியே வெப்பம் அடித்தால் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இவ்வாறு, இந்த பிரமிடு வடிவ குடில் உடலின் வெடப்பநிலையை சீராக வைக்கிறது.
மேற்கூரையில் தென்னங்கீற்றுகளுக்கு மேல் காமாட்சி புல்லை பரப்பியுள்ளோம். இந்த புல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொண்டு, பிரமிடு அறைக்குள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால், கோடை காலத்தில் குடில் வீட்டில் குளிர்சாதன வசதி தேவையில்லை. மின்விசிறியும் தேவையில்லை. காலை முழுவதும் வேலை செய்துவிட்டு மதியம் இந்தக் குடிலில் ஓய்வெடுத்தால் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் ஏற்படுகிறது.
மேலும், கெட்டுப்போகக்கூடிய பழங்கள், காய்கறிகளை வைத்துக்கொள்ள குளிர்பதனக் கிடங்காகவும், இந்த குடில் வீடுகள் மூலம் இரட்டிப்பு பயன் கிடைக்கிறது. இந்த குடில் வீடு அமைக்க 90 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. செப்பு கம்பி, ஆணியைக் கொண்டு கம்புகள் கட்டப்பட்டுள்ளதால், எந்த பருவநிலைக்கும் குடில் பாதிக்கப்படாது.
நன்றி: ஹிந்து

Tuesday, April 19, 2016

பொடுகை விரட்ட அற்புத மருந்து வேப்பம்பூ

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட வேப்பம்பூவை பயன்படுத்தி பொடுகை முற்றிலுமாக விரட்டலாம்.




1. மருதாணி இலையை ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம், வேப்பிலை, துளசி, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.
நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் 'கருகரு'வென நன்கு வளரும்.
2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

Monday, April 11, 2016

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க .........


 

 


குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையேஸ என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.

குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.

தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.

பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள் சில..

உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.

தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.

சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.

காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லதுஸ அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும் வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.

அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

Friday, April 1, 2016

ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!

  

"என் குழந்தை சாப்பிட மறுக்கிறது; டானிக் ஏதும் சொல்லுங்களேன்...' பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகள் குறித்து கூறும் புகார் இது. யாராவது, "என் குழந்தை அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுகிறது; உடற்பயிற்சியே செய்வதில்லை; உடல் குண்டாக இருக்கிறது...' என்று சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா?
முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது! குழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது.
வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை. குழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, "அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. வயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். உணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். பத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது.
அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில்  சாப்பிடும் போது தான், இவற்றில்  சத்துக்கள் கிடைக்கின்றன.
ஓடி ஆடி விளையாடாமல், "டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது. விளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.
மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி,  "டிவி' முன் அமர்வது நல்லதல்ல;  இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது. சில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். "சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்!