Saturday, February 18, 2017

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்

     வேலையை  விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற   காலம்  எப்போது வரும்? தொழிலை  எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள்  தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.

             தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக்  காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.

             தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.

             CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார்  சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான  காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திருக்கிறார் .வேலையை விடுத்து தொழிலில் இறங்க விரும்புகிற அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக  இருக்கும். இதோ,தனி ஆளாக தொழிலில் வெற்றி பெற அந்த 20 உத்திகள்.

                1.வேலையை விடுக்கின்ற போது  , உங்களுக்கான மாதந்திர  வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவுபிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுக்கடன்  போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.

               2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital)  உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital)  (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery)  , கணினி(Computer) போன்ற மின் மற்றும்  மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles)  போன்ற  பல ).
இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்( Working Capital)  (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries)மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),  பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost), பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.

                    3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேளையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான  Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number)VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code), Company Registration போன்ற   அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account)  தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , Business Card, Letter Pad, Brochure, Palm let  போன்றவற்றை  முன்கூட்டியே தயாரித்தல்,   உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

          4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற   ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும்  . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான  செலவும் தொடங்கிவிடும்.

5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய  வாடிக்கையாளர்களைத்தான்( Revenue Customers)  .

6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .

8.உங்கள் தொழிலில்  பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources)  வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக  இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும்  முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக்   கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor  போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier  களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation)  பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில்   யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .

14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை  அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை  விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும்   வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.

18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things)  . நீங்கள் பணத்தை  தேடி ஓடுவதை  விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

Wednesday, June 29, 2016

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் !!!


1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

4. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்
பொடுகுக்கு ரெம்ப நல்லது

6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

7. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

8. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
9. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

10. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

11. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

12. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

13. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

14. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

15. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

16. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

17. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

18. அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்
**

மேலும் சில குறிப்புகள் :

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

* 4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.

கூந்தல் மிருதுவாக இருக்க-

*வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

*நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

*டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Wednesday, June 15, 2016

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

Monday, June 13, 2016

மோர் இன்றி அமையாது உலகு

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.
குறுந்தொகையில்...
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:
செரிமானப் பாதை சீராக
உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.
மருந்தாகும் மோர்
கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.
திரிதோஷ சமனி
“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
நீர் சுருக்கி, மோர் பெருக்கி
கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.
அனுபானம்
மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.
வெயில் காலங்களில்
வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.
நஞ்சகற்றி
மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.
மோருடன் வரவேற்போம்
ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

மறந்துபோன கோடை பானங்கள்

வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இந்தக் கோடையிலிருந்தாவது இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய பானங்களைப் பருக ஆரம்பிப்போம். கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் என்னென்ன?
`மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு
முப்பது வருடங்களுக்கு முன்புவரை, இல்லம்தோறும் தேவையான அளவுக்குக் கம்பரிசி இருந்தது. வெயில் காலம் வரும்போது, கம்பஞ்சோற்றோடு மோரும் சின்ன வெங்காயமும் கலந்த குளிர்ச்சியான பானம் தயாரிக்கப்பட்டு அருந்தப்பட்டது. ஆனால் இன்றைக்குக் கம்பு, கேழ்வரகு என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளவட்டங்கள் பட்டிதொட்டிகளில்கூட பெருகிவிட்டனர். பாரம்பரியச் சிறுதானியமான கம்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது.
‘கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ என்று எழுதி, கம்பங் கூழானது உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்கிறார் சித்தர் அகத்தியர். போர் வீரர்களுக்குப் புஷ்டி கொடுக்கக் கம்பு அடை, கம்பு சோறு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறியலாம். நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து பானங்கள், நெடுங்காலமாகக் கம்பின் துணையுடன் தயாரிக்கப்பட்டவைதான். உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் நல்ல பலத்தையும் தருகிறது. கொதிக்கும் கோடைக் காலத்துக்குக் கம்பை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தாராளமாக உண்ணலாம். அதேவேளையில், தோல் நோய் உள்ளவர்கள் மட்டும் கம்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ‘கவி சக்கரவர்த்தி’ கம்பர்போல, ஏழைகளின் ‘மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு எனலாம்!
நலம் தரும் நன்னாரி
சுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. `பித்தம் அதி தாகம் உழலை’ என வெப்ப அறிகுறிகளைக் களை எடுக்கும் ஆயுதமாக நன்னாரியைப் பிரயோகிக்கலாம் என்கிறார் தேரையர்.
இது உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் (Blood purifier) நன்னாரியை, `மருத்துவத் துப்புரவாளர்’ எனலாம். நன்னாரி சர்பத்துடன் இளநீரும், நுங்கு கூழ்மத்தையும் சேர்த்து மது கலக்கப்படாத ஆரோக்கிய `காக்டைல்’ பானம், சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரசித்தமாக இருந்தது.
நன்னாரியில் சாப்போனின்கள், சைட்டோஸ்டீரால், வேனிலின் என முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. மனதைச் சாந்தப்படுத்தும் பொருட்களும் இதில் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.
வெப்பம் தணிக்கும் கரும்புச் சாறு
சங்க கால மக்கள், கரும்பின் இனிப்பான சாற்றை விருப்பத்தோடு பருகியதாக `கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரி தெரிவிக்கிறது. தேனின் சுவைக்கு ஒப்புமை கூறும் அளவுக்கு இனிப்பான கருப்பஞ்சாறு, உடலின் அழலைத் தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.
தேகத்தில் நெருப்புபோலத் தகிக்கும் எரிச்சலைக் குறைக்க, `குளு குளு பவுடர்’ விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், கரும்பஞ்சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்’ என்று சவால் விடுகிறது சித்த மருத்துவக் குறிப்பு ஒன்று. கருப்பஞ்சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கருப்பஞ்சாறும் இஞ்சிச் சாறும் செரிமானத்துக்குத் தேவையான சுரப்புகளை (Digestive juices) அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
இதம் தரும் பதநீர்
பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
காலங்களைத் தாண்டிய எலுமிச்சை
எலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் கரைபுரள்வதோடு, உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். மாரத்தான் போட்டியாளர்களும் அக்காலத்தில் மலைகளைக் கடந்து பயணம் செய்வோரும் ஆற்றலுக்குப் பயன்படுத்தியது எலுமிச்சையைத்தான். பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி தடைபட்டு நிற்கும்.
பாரம்பரிய பானங்கள்
அரிசியைக் கழுவிய கழுநீரில் பனைவெல்லமும், சிறிது வெண்ணெயும் கலந்த காலை பானம் வெயிலுக்கு உகந்தது. சுகப் பிரசவம் உண்டாக்க, கர்ப்பிணிகளுக்கு இன்றும் சில கிராமங்களில் இந்தப் பானம் அறிவுறுத்தப்படுகிறது (அரிசி கழுவிய நீருக்குப் பதில், சீரகம்/ சோம்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம்). வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வைப் போக்க, மோர் சேர்ந்த கேழ்வரகுக் கூழுடன், பச்சை வேர்க்கடலையைக் கலந்து கொடுக்கும் வழக்கம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அதிகம் உள்ளது. வெட்டிவேர், சீரகம், வெந்தயம் கலந்த தண்ணீர் உள்ளுறுப்புகள்வரை குளிர்விக்கும்.
கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக, நீரில் கருப்பட்டி கரைத்த இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். பன்னெடுங்காலமாக உள்ள நீராகாரம், கோடைக்கு ஏற்ற இதமான பானம்.
இவை மட்டுமல்லாமல் அனைத்து பானங்களுக்கும் அடிப்படையான தண்ணீரை மண்பானைகளில் சேமித்து வைத்து, ஒரு நாளைக்கு 3 4 லிட்டர்வரை அருந்துவது அவசியம். கற்றாழைக்குள் இருக்கும் கூழ் போன்ற பகுதியை எடுத்து மோர், சீரகம் சேர்த்து மத்தைக்கொண்டு கடைந்து கிடைக்கும் குளிர்ச்சிமிக்க பானத்தை, வேனிற் காலத்தில் பயன்படுத்தலாம். கிர்ணி (முலாம்), சாத்துக்குடி, மாதுளை, திராட்சை ஆகிய இயற்கை பழச்சாறுகளைத் தாராளமாகப் பருகலாம். பழச்சாறுகளைவிட பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இருந்தாலும் வெயில் காலத்தில் நீரிழப்பை சமன் செய்வதற்குப் பழச்சாறுகளை அருந்துவதில் தவறில்லை. சுவையூட்டச் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
செயற்கை பானங்களைத் தவிர்த்து, நம்மோடு உறவாடும் இயற்கை பானங்களுக்கு வாக்களித்து கோடைக் காலத்தைக் குளுமையாகக் கடத்துவோம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

கோடைக்குக் கேடயமாகும் பழங்கள், காய்கள்!

கூரையில் படர்ந்த சுரை, தரையில் தவழ்ந்த பூசணி, பூமிக்குள் மறைந்த கிழங்குகள், பசுமையாகத் துளிர்த்த கீரைகள், வீடுகளைச் சுற்றி வளர்ந்த காய்கள் போன்றவற்றின் துணைகொண்டு, பண்டைய தமிழர்கள் வெயில் காலச் சமையல் நுட்பங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு பருவநிலைக்குத் தகுந்த பழங்களும் காய்களும் நம்மைச் சுற்றியே ஏராளமாய் இருக்கின்றன. காய்கள், பழங்கள் போன்றவை நமக்கு ஊட்டச்சத்தை அள்ளிக் கொடுப்பது மட்டுமன்றி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நம் உடலின் இயங்குமுறையையும் முறைப்படுத்துகின்றன.
ஆதாம், ஏவாள் காலம் தொடங்கி இன்றைய `டெஸ்ட் டியூப் குழந்தைகள்’ காலம்வரை, இயற்கையின் கொடையான காய்கள், கனிகள் மற்றும் கீரைகளே ஆரோக்கியத்தை வழங்கிவருகின்றன. காலத்துக்கு ஏற்ப விளையும் காய்களையும் பழங்களையும் சாப்பிடுவதால், குறிப்பிட்ட காலநிலையை உபாதைகள் இன்றி நகர்த்தலாம். அந்த வகையில் கொதிக்கும் வெயிலின் தாக்குதலை எதிர்கொள்ளக் காய்கள், கீரைகள், கனிகளின் பங்களிப்பைப் பார்ப்போம்.
ரத்தஅழுத்தம் போக்கும் தர்ப்பூசணி
உடலின் நீர் உறிஞ்சப்படும் வெப்ப காலத்தில், தாகத்தை நிவர்த்தி செய்வதில் நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணிக்குச் சிறப்பான இடமுண்டு. American journal of Hypertension வெளியிட்ட ஆய்வு முடிவில், தர்ப்பூசணி உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே, டென்ஷனைக் குறைக்க நினைப்பவர்கள் தர்ப்பூசணியைத் தாராளமாய்ச் சாப்பிடலாம். உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, தோல் பகுதிக்கும் நல்ல ஊட்டத்தை அளிக்கிறது. இதில் 92 சதவீதம் நீர்ச்சத்து, 3.2 சதவீதம் நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளன.
மற்ற காய்கள், பழங்களைவிட தர்ப்பூசணியில்தான் ‘லைகோபீன்கள்’ அதிகம். லைகோபீன்களுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் உண்டு. மக்னீசியம், இரும்புச் சத்து நிறைந்த இதன் விதைகளை வறுத்துச் சாப்பிடும் வழக்கம் சில மலை கிராமங்களில் உண்டு. விதைகள் இல்லாமல் உலா வரும் `ஹைபிரிட்’ வகை மலட்டுத் தர்ப்பூசணிகளைத் தவிர்ப்பது நல்லது. வெயில் கால உபாதைகளைத் தடுப்பதோடு, நாம் எதிர்பார்க்கும் அளவைவிட அதிகப் பலன்களைத் தரும் ‘தண்ணீர் பழத்தை’ மரபணு மாற்றத்துக்கு இரையாக்காமல் இருப்பது அவசியம்.
நன்மை நவிழும் நெல்லி
கோடைக் கால நோய்களைத் தடுக்க, கோட்டைபோல ‘எதிர்ப்பு சக்தியை’ தரக்கூடியது நெல்லிக்காய். மலைத்தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், கேரள மலைப்பகுதிகளில் கிடைக்கும் சுவையான `ஊறல் உண்டி’. நெல்லிக்காயோடு சேர்த்துத் தேனுக்கும் நோய் எதிர்ப்பு திறன் உண்டு. `தேன் நெல்லிக்காயை’ வீட்டிலேயே தயார் செய்வதால், வைட்டமின் `சி’ இல்லம் தேடி வரும். கோடை மழையால் ஏற்படும் வெப்பநிலை மாற்ற நோய்களைத் தடுக்கிறது நெல்லி. நெல்லியின் மேன்மையை அறிந்த பண்டைய தமிழர்கள், `நெல்லிக்காய் மாலையை’ கழுத்தணியாகப் பயன்படுத்தியுள்ளனர். `நெல்லியைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டி’ எனப் பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன முன்னோரது ஞானத்தை, இன்று விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
விளாம் பழக் கூழ்
பனிக்கூழ் (Ice cream) சாப்பிட ஆசையா? விளாம்பழத்தின் ஓடுகளை இரண்டாகப் பிளந்து, பழச்சதையோடு தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கலக்கி, அப்படியே சாப்பிடும்போது, இயற்கையான பனிக்கூழ் நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டி இனிமையைத் தரும். பனிக்கூழின் முன்னோடி விளாம்பழமோ என ஆச்சரியம் அடையும் அளவுக்கு, சுவையிலும் மணத்திலும் ஐஸ்கிரீம்களைத் தோற்கடிக்கும் விளா!
விளாம்பழம், சூட்டினால் உண்டான நீர்வேட்கையைத் தடுக்கும் (வெப்பாருந் தாகமும் போம்) என அகத்தியரும், பித்தம் சார்ந்த நோய்களை நீக்கும் எனத் தேரையரும் விளாம்பழத்தின் பெருமைகளைக் கூறுவதால், வெப்பக் காலத்துக்கு உகந்தது. மட்பாண்டங்களுக்கு வாசனையைக் கொடுக்க விளாம்பழத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்ற செய்தியை, ‘விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி’ எனத் தொடங்கும் நற்றிணை பாடல் மூலம் அறியலாம். பீட்டா கரோட்டின், தயமின், ரிபோஃபோளோவின், டானின் ஆகிய ஊட்டச்சத்துகள் விளாம்பழத்தில் அதிகம் உள்ளன.
பலன் தரும் பழங்கள்
வெயில் காலத்தை, குளிர்ச்சியால் முலாமிடக்கூடிய பழம் `முலாம்’. சாறாகவும், நாட்டுச் சர்க்கரை சேர்த்த பண்டமாகவும் இப்பழத்தை உண்ணலாம். தாகத்தைத் தணித்து, சோர்வைப் போக்கி, உடனடியாகப் புத்துணர்வைக் கொடுக்கும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, வாழை போன்றவற்றை ரசனைக்கேற்ப `சாலட்களாக’ சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலத்தை எளிமையாக வெளியேற்ற இவை உதவும்.
ஸ்டிராபெரி, கிரான்பெரி, டிராகன் புரூட் மற்றும் வாயில் பெயர் நுழையாத சில பழங்களில்தான் அதிக ஊட்டம் கிடைக்கும் என்பது தப்புக் கணக்கு. நமக்கு நன்கு பரிச்சயமான நம்மூர் பழங்களிலேயே, இறக்குமதிப் பழங்களில் உள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன.
நீர்க் காய்கள்
அக்னி வெயிலில் உண்ணத் தகுந்த காய் வகைகளில் நீர்த்தன்மை நிறைந்த சுரை, புடல், பீர்க்கங்காய் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம். இவை அனைத்துக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும் குணம் இருப்பதோடு, நீர்த்தன்மையை உடலில் தக்கவைக்கவும் உதவுகின்றன. இவற்றைக் கூட்டாகவோ, பொறியலாகவோ செய்து சாப்பிடும்போது, சிறிது மிளகுத் தூளும் சேர்த்துக்கொள்வதால், கபம் தலை தூக்காது.
சுரைக்காயில் சாறெடுத்தும் குடிக்கலாம். வெப்பம் காரணமாக உண்டான தலைவலிக்கு நெற்றிப் பகுதியில் சுரைக்காயை வைத்துக் கட்டலாம் என்கிறது சித்த மருத்துவம். நீச்சல் பயில உதவிய சுரைக் குடுவையைப் போல, வெப்பத்தை வெல்லவும் சுரைக்காய் கண்டிப்பாக உதவும். சுரையில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்க்காய்கள் ஜீரணத்தையும் விரைவுபடுத்துகின்றன. முள்ளங்கி, வெண்பூசணி, தயிர் சேர்த்த பச்சடி (வாழைத் தண்டு / வெள்ளரி / சிறுவெங்காயம்) ஆகியவை அனலைத் தணிக்க உதவும்.
வெல்லும் வெள்ளரி
குளிர்ச்சி உண்டாக்குவது, சிறுநீர் எரிச்சலைக் குறைப்பது, நீர்வேட்கையை நிவர்த்தி செய்வது என வெயிலை எதிர்த்து முன்னின்று போராடும் `படை தளபதி’ வெள்ளரி. இதன் விதைகளுக்குச் சிறுநீர் பெருக்கும் செய்கை இருப்பதால் கோடைக் காலத்தில் உண்டாகும் நீர்ச்சுருக்கு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை வராமல் பாதுகாக்கும். `முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு’ எனத் தொடங்கும் `மலைபடுகடாம்’ பாடல், வெள்ளரி சேர்த்துச் சாதம் சமைத்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் குறிப்பிடும் வெள்ளரி சாதம் பரிமாறப்பட்டபோது, சங்கக் காலத்தில் வேனிற் காலமாக இருந்திருக்கலாம்! வெடிப்புகள் உண்டான வெள்ளரி பழத்தின் சதையோடு, பனைவெல்லம் கலந்து உண்பது குளிர்ச்சியானது, சுவையானதும்கூட. கடந்த தலைமுறையினருடைய வேனிற் விடுமுறையின் விருப்பப் பண்டம் இந்த வெள்ளரி பழம்.
குளிர்ச்சி தரும் கீரைகள்
வைட்டமின்கள், தாதுகளின் தொழிற்சாலையாக விளங்கும் கீரை வகைகள், உடலில் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை. அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப் பசலைக்கீரை, வெயில் காலத்துக்கே உரிய ‘சிறப்பு மருத்துவர்’. பருப்பு சேர்த்துப் பசலை கீரையைக் கடைந்து சாப்பிட, அழல் தணிந்து சிறுநீர் எரிச்சல் மறையும். Lutein, zea-xanthin போன்ற எதிர்-ஆக்ஸிகரணப் பொருட்கள் கொடிப்பசலையில் அதிகம். சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை என வெயில் காலம் முழுவதும் கீரைகளை மாற்றி மாற்றி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மலத்தை முழுமையாக வெளியேற்றுவதில் கீரைகளுக்கு முக்கியப் பங்குண்டு. கீரை வகைகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். நோய்களை எதிர்த்துப் போராட ஆதிமனிதர்களிடம் இருந்த ஆயுதங்களே காய்கனிகள்! இப்போது நோய்களோடு பாதி மனிதர்களாய் வாழும் நம்மிடமும் அந்த ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நோயில்லா முழு மனிதர்களாக மாறுவோம். வெயில் காலத்துக்கு ஏற்ப நம் உடலைத் தகவமைக்க உதவும் பழங்கள் மற்றும் காய்களை, வயிற்றுக்குப் பரிசளித்தால் வேனலும் இனிதே!
கோடைக் கால எச்சரிக்கை!
# குழந்தைகளுக்குத் தகுந்த இடைவெளிகளில் நீர் கொடுப்பது அவசியம்.
# பழச்சாறுகளைப் பொறுத்த வரையில் வீட்டிலேயே தயார்செய்து கொடுக்கலாம். அதிகக் குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளைச் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு உடனடியாகச் சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு.
# முதியவர்களுக்குத் தாக உணர்வு சிறிது குறைந்தே இருக்கும். தனி அக்கறையுடன் அவர்களுக்கும் நீர்ச்சத்து மிகுந்த ஊட்டங்களை அளிப்பது முக்கியம்.
# ஒரே நேரத்தில் அதிக நீரைப் பருகாமல், தாக உணர்வுக்கு ஏற்ப நீரைப் பருகலாம்.
# பழ வகைகளைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக் கூடாது. இதனால் பல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றன ஆராய்ச்சிகள். இவற்றைத் தவிர்க்கப் பழங்களை வாங்கியவுடன் சாப்பிடுவதே உசிதம்.

முதுமை என்றால் எந்த வயது?

நாற்பது வயது என்பது இளமையில் முதுமை. ஐம்பது வயது முதுமையில் இளமை’ என்கிறார் ஹோசா பாலோ. ஆனால், இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது.
முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, பெற்ற குழந்தைகளின் புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் முதுமைக்கு எது பெருமை என்று தானே எண்ணுகிறீர்கள். ஆனால், நான் பயணித்த சில நாடுகளில் சந்தித்த முதியவர்கள், முதுமையைப் பற்றிய எண்ணங்களை மாற்றிவிட்டனர்.
மலை முழுக்க நெல்
சீனாவின் மிகப் பிரபலமான குபின் சுற்றுலாத்தலத்துக்கு அருகாமையில் இருக்கும் லாங் ஷெங்கிலிருந்து 27 கி.மீ. தொலைவில் இருக்கிறது லாங்ஜி என்கிற கிராமம், இங்கு டிராகன் பேக்போன் ரைஸ் டெரஸ் என்கிற நெல் வயல்கள் புகழ்பெற்றவை.
கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டரிலிருந்து 11,000 மீட்டர்வரை உயர்ந்திருக்கும் மலைகள், குன்றுகளில் மொத்தம் 16,308 ஏக்கர் பரப்புக்குச் சுற்றிச் சுழன்று உச்சிவரை செல்லும் வயல்வரப்புகளில் நெல்லை விதைத்து வளரச் செய்துள்ளனர். 1271-1368-ல் யுவான் வம்ச ஆட்சி காலத்தில் தொடங்கிய இந்தச் சிரமமான வேலை 1644-1911-ல் குவிங் வம்ச ஆட்சிவரை நீடித்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் ஸுவாங் மக்களின் கடின உழைப்பே இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
அசந்துபோனேன்
இந்த மலைகளில் ஒன்றில் ஏறிக் குன்றுகளில் பயிர் செய்யப்பட்டிருக்கும் நெற்கதிர்களையும் அவற்றைத் தாங்கி நிற்கும் டிராகன் முதுகெலும்பு வயல்களையும் பார்க்க நானும் என் கணவரும் ஏறிக்கொண்டிருந்தோம்.
இது மிக உயரமான மலை, உங்களால் ஏற முடியாது என்று ஆட்களைச் சுமந்து செல்லும் டோலிகளை தூக்கிக்கொண்டு கிராமத்து ஆட்கள் ஓடிவந்தனர். அதைத் தள்ளி வைத்துவிட்டு, நாங்கள் ஏறத் தொடங்கினோம். பாதித் தொலைவு ஏறியவுடன் மூச்சிரைக்க ஆரம்பித்தது. சிறிது சிரமப்பட்டு ஏறினோம். ஆனால், எங்களைப் பின்தள்ளி விட்டு ஏழு, எட்டு லாங்ஜி கிராமத்துப் பெண்கள் குடுகுடு என்று மேலே ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தாவித்தாவி ஏறிக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.
“இதற்கே இப்படி ஆச்சரியப்படுகிறீர்களே, அவர்களுடைய வயதைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” என்று தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டே சொன்னார் எங்களுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி.
“அவர்களுக்கு ஒரு அறுபது வயது இருக்குமா?” என்று தயங்கியபடியே நான் சொன்னேன். அதற்குக் கைகளைக் கொட்டிச் சிரித்த அந்த வழிகாட்டியைக் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.
“அவர்கள் அனைவரும் 90 வயதைக் கடந்தவர்கள்” என்றாரே பார்க்க வேண்டும். “என்ன உண்மையா, இந்த வயதிலும் இப்படி ஒரு வேகமா” என்று அசந்து போனேன்.
“லாங்ஜி மக்களின் வாழ்க்கைமுறையும் சுற்றுச்சூழலும்தான் அவர்களுடைய ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடிகோலியிருக்கிறது” என்றார்.
முதுமையிலும் இளமை
வயதைத் தள்ளி வைத்துவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது, ஆவியில் வேக வைத்த காய்கறிகள், அவித்த பருப்பு வகைகள், அரிசி உணவு, எண்ணெயில் பொரித்து எடுக்காத மீன் வகைகள், சொந்தப் பந்தங்களுடன் கூடி வாழ்வது, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, போதும் என்ற மனம், போட்டி - பொறாமை அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை இவர்களிடையே நோய்களையும் வயோதிகத்தையும் விரட்டி முதுமையிலும் இளமையாக வைத்திருக்கிறது.
ஜப்பான் நாட்டிலும் எண்பது வயதைக் கடந்த முதியவர்கள் வேகமாகச் சைக்கிள் ஓட்டிப்போவதைப் பார்த்திருக்கிறேன். அத்துடன் பூங்காக்களில் தாய்ச்சி எனப்படும் உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருப்பார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் முதிய பெண்கள் நேர்த்தியாக உடை அணிந்துகொண்டு, கேளிக்கை இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக விளையாடி மகிழ்கிறார்கள். அவர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் ஹெல்த் செக்கப் மூலம் கிடைக்கும் தெளிவு, செயல்படுவதற்கான சக்தியைத் தருகிறது.
ஒளிரும் தன்னம்பிக்கை
நியூயார்க் நகரத்தில் ஓர் உணவகத்தில் எண்பது வயதைக் கடந்த ஒரு பெண், முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரைச் சுமந்தபடி உட்கார்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்ததைப் பார்த்து அசந்து போனேன்.
மெதுவாக அவரிடம் சென்று அவரின் மனோதிடத்தைப் பாராட்டினேன். “நான் என்னுடைய வாழ்க்கையை, அதனுடைய கடைசி விநாடிவரை மகிழ்ச்சியாகக் கழிக்க விழைகிறேன்” என்றார்.
இப்படிப்பட்ட மனோபாவம் இருந்தால், முதுமையும் அதைத் தொடரும் இன்னல்களும் சூரியனைக் கண்ட பனியாக மறைந்துபோகும். முதுமையிலும் இனிமை காணலாம்.